தமிழ்நாடு முழுவதும் சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலரை நியமித்து, உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் நடைபெற்று வரும் நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் சார்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், மாயமான வழக்கு ஆவணங்களைக் கண்டறிய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, காணாமல் போனதாகக் கருதப்பட்ட 41 வழக்கு ஆவணங்களில், 23 வழக்குகளின் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மாவட்ட காவல் துறையினரால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள 18 வழக்குகளின் ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், காவல் நிலையங்கள், வழக்குக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், புகார்தார்கள், கோயில் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்திற்குள்பட்டு தங்களது கடமையை திறம்பட செய்துவரக்கூடிய காவல்துறை அலுவலர்களுக்கு எந்தப் பற்றாக்குறை இல்லாததால், காணாமல்போன சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கண்டறிய ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலரை நியமிக்க வேண்டிய அவசியமேதுமில்லை எனவும் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...தேர்வு முடிவுகள் வந்ததும் நீட் குறித்த சூர்யாவின் நிலைப்பாடு மாறும்: அண்ணாமலை