சென்னை அடுத்த மேல்மருவத்தூர் பகுதியில், விலை உயர்ந்த உலோகச் சிலையைக் கடத்த முயலுவதாகக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து மேல்மருவத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து சிலையைக் கடத்தும் நபர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அதில், கடத்தல் கும்பல் இரண்டு கும்பல்களாகப் பிரிந்து விலையுயர்ந்த சிலையை வெளிநாட்டில் விற்பதற்கு விலை பேசிவந்தது தெரியவந்தது.
பொறிவைத்துப் பிடித்த காவல் துறை
தொன்மையான சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் பலரையும் இவர்கள் அணுகியுள்ளனர். அவ்வாறு சிலை வாங்க வருபவர்கள், தரகர்கள் வந்தால் அவர்களை அடையாளம் காண்பதற்கு சினிமா பாணியில் பத்து ரூபாய் நோட்டை கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவரம் அறிந்த காவல் துறையினர், சிலை கடத்தி விற்கும் நபர்கள் என நாடகமாடி, சிலையை வாங்குவதற்காக அணுகியுள்ளனர். பத்து ரூபாய் நோட்டுடன் மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பில் சிலையோடு காத்திருந்த கும்பலிடம் பேரம் பேசியுள்ளனர். அவ்வாறு பேசும்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.
இதில் சுந்தரமூர்த்தி, கார்த்தி, மூர்த்தி, அசோக், குமரன், அறிவரசு, அப்துல் ரகுமான் ஆகிய ஏழு பேரையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கடத்தல் கும்பலிடமிருந்து தொன்மையான மீனாட்சி அம்மன் உலோகச் சிலையைப் பறிமுதல்செய்தனர். சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு இந்தச் சிலையை விற்க முயன்றது தெரியவந்தது.
இரண்டு குழுவாகப் பிரிந்து கடத்தல்
இவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டபோது, கைதான திருவாரூரைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவர், இதுபோன்று விலை உயர்ந்த சிலைகள் வாங்குவது விற்பது தொடர்பாக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது.
மேலும் சுந்தரமூர்த்தி மூலமாக சென்னையைச் சேர்ந்த கார்த்தி, மூர்த்தி என்ற இரண்டு பேர் ஒரு கும்பல் ஆகவும், மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன், குமரன் அறிவரசு ஆகிய மூன்று பேர் ஒரு கும்பல் ஆகவும், இந்தச் சிலையை விற்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த இரண்டு கும்பலுக்கு உதவியாக வேலூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வேலூர் சென்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், சோதனை செய்ததில் ரிஷபதேவர் என்ற காளை மீது அமர்ந்திருக்கும் சிவன் சிலையை அப்துல் ரகுமானிடமிருந்து பறிமுதல்செய்துள்ளனர்.
சிலை பறிமுதல்
இதனைத்தொடர்ந்து அப்துல் ரகுமானை கைதுசெய்து சென்னை அழைத்துவந்தனர். இவர்கள் மக்களோடு மக்களாக இருந்து சிலை கடத்தி விற்பனை செய்வதில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இந்தக் கும்பலுக்குப் பின்னால் மிகப் பெரிய சிலை கடத்தல் கும்பல் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஏழு பேரிடமும் காவல் துறையினர் விசாரணை முடித்து, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் முன்நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
அடுத்த கட்டமாக இவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட சிலை குறித்து இந்திய தொல்லியல் ஆய்வக அலுவலர்கள் ஆய்வு செய்துவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல தனியார் பல்பொருள் அங்காடியில் லட்சக்கணக்கில் மோசடி செய்த ஊழியர்கள்