சென்னை: சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சிலைகளை பல நாடுகளில் இருந்து கடத்தி விற்பனை செய்த விவகாரத்தில் சிலை கடத்தல் வழக்குகளில் சிக்கிய சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இன்டர்போல் உதவியுடன் கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்தனர்.
சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மீது 5 சிலை கடத்தல் வழக்குகள் போடப்பட்டன. கடந்த பத்து வருடமாக சிறையில் உள்ள சுபாஷ் கபூர் தொடர்பான வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெர்மன் மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள வழக்குகளில் சுபாஷ் கபூர் விசாரிக்கப்பட வேண்டிய காரணத்தினால், நீண்ட காலமாக தமிழ்நாட்டில் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூரை திருப்பி அனுப்புமாறு ஜெர்மன் அரசு கடிதம் அனுப்பியது.
குறிப்பாக ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்ற சுபாஷ் கபூர், தமிழ்நாட்டில் சிறையில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை அதிரடியாக ஜெர்மன் அரசு ரத்து செய்தது.
இந்நிலையில் சுபாஷ் கபூரை ஜெர்மன் நாட்டிற்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலையில் சிலை கடத்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் கடைசி கட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் சித்தமல்லி சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் கபூருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறையில் இருப்பதால் ஏக காலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விதிக்கப்பட்ட தண்டனையான 10 ஆண்டுகள் கழிந்து விட்டதாக கூறப்படுகிறது. மீதம் நான்கு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் ஜெர்மன் அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சுபாஷ் கபூர் ஜெர்மன் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என சிறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஜெர்மன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.7000 செலுத்தாமல் சுபாஷ் கபூர் காலம் தாழ்த்தி சிறையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஐந்து வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பொழுது வேண்டுமென்றே சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதை தள்ளிப் போடுவதற்காக சட்டரீதியில் காலத்தை தாழ்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சுபாஷ் கபூர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
சிலை கடத்தலில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதித்த சுபாஷ் கபூர் வேண்டுமென்றே தண்டனையில் விதிக்கப்பட்ட ரூ.7000 அபராதத்தை செலுத்தாமல் நாடகமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மீதமுள்ள வழக்குகளில் விசாரிக்கப்படுவாரா? அல்லது ஜெர்மன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விசாரணைக்காக அனுப்பப்படுவாரா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:நூதன முறையில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று மோசடி ...பாதிக்கப்பட்டவர்கள் புகார்..