சென்னை: மழை காலத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. மழைக்கு முன்பாகவே முதலமைச்சர், அதிகாரிகளை அழைத்து தேவையான யுக்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சென்னைக்கு 15 கண்காணிப்பு அதிகாரிகளும், தமிழ்நாட்டிற்கு 37 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று திருவள்ளூரில் தான் அதிகமாக மழை பெய்தது. சென்னையில் திருவிக மண்டலத்தில் அதிகபட்சமாக 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழை பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால் குழுவினரை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதியில் மழை வந்தாலும் அந்த பகுதியை உடனடியாக எங்களுக்கும் தெரிவிக்க வேண்டும். தேசிய மீட்பு படையினர் 1149 பேர், 899 தமிழ்நாடு மீட்பு படையினர் ஆகியோரும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் இருந்த மழை பாதிப்புக்கும், தென்மேற்கு பருவமழை காலத்தில் இருந்த பாதிப்பை விட இந்த வடகிழக்கு பருவமழை நாட்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 5 தினங்கள் மழை இருப்பதாக கூறியிருக்கிறார்கள். பொதுமக்களுக்காக 5,093 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது எந்த முகாமிலும் ஆட்கள் இல்லை. சென்னையில் மட்டும் 4 பேர் இருக்கிறார்கள். மனித உயிர் சேதம் இரண்டு பேர். அவர்களுக்கான இழப்பீடு தொகை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வட சென்னை பகுதியிலும் மழைநீர் வடிகால் பணிகளில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஒவ்வொரு பகுதியிலும் நடந்து வருகிறது. பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முதலமைச்சர் கண்காணிப்பில் நாங்கள் இருப்பதால் துரிதமாக செயல்பட்டு வருகிறோம். மழை பாதிப்புகள் தொடர்பாக கட்டுப்பாடு மையத்துக்கு 138 அழைப்புகள் தமிழ்நாடு முழுவதும் வந்துள்ளது. 38 அழைப்புகள் சென்னையில் வந்துள்ளது. அதில் 25 அழைப்புகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த செயல்பட்டு வருகிறது. 70 அழைப்புகள் இன்னும் இருக்கிறது.
மிகப்பெரிய பாதிப்பு எந்த மாவட்டத்திலும் இல்லை. நீலகிரி, கொடைக்கானல் போன்றவை முதலமைச்சர் கண்காணிப்பில் இருக்கிறது. செம்பரம்பாக்கத்தில் 24 அடி கொள்ளளவு இருக்கும் நிலையில் தற்போது 20.64 அடி இருக்கிறது. தண்ணீர் வரத்து 1,150 கன அடியாகவும், வெளியேற்றம் 1,116 கன அடியாகவும் இருக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர்