சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை இன்று மாலை ஏழு மணியுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளியாக சுற்றி மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் அந்த அந்த தொகுதியில் தெரு தெருவாக சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க வாக்கு சேகரிக்க சென்றேன். உங்க பிள்ளைக்கு நீங்க வாக்கு கேட்க வில்லையா? என்று கேட்கக்கூடாது என்பதற்காக வாக்கு கேட்க வந்துள்ளேன். கலைஞர், பேராசிரியர் அன்பழகன் வெற்றி பெற்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தற்போது என் மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய வைக்க வேண்டும். மிசாவை பார்த்த திமுக ஒரு பனங்காட்டு நரி. இந்த ரைடு போன்ற சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். பல்வேறு நாளிதழ்களில் திமுக ஆட்சியில் நடைபெறாததை பொய் விளம்பரம் கொடுத்துள்ளனர். மக்கள் ஏப்ரல் 6ஆம் தேதி தக்க பதிலடி கொடுப்பார்கள். விளம்பரங்களை பொய்யாக செய்தி போல் போட்டுள்ளனர். இந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு அக்கரமங்கள் நடைபெற்றுள்ளது. உதயநிதி வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். அது போல் தமிழ்நாடு முழுவதும் நமது வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.
நமது வெற்றியை தடுக்க வேண்டும் என எண்ணி எனது மகள் உட்பட திமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். எனது மகள் வீட்டில் சோதனை நடத்தி, அங்கு பிரியாணியும் சாப்பிட்டுவிட்டு திமுக கூடுதலாக 22 தொகுதிகள் வெற்றி பெரும் எனக் கூறியுள்ளனர்" என்றார்.