நடிகர் சத்யராஜின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை திவ்யா உருவாக்கியுள்ளார். இந்தியாவில் பிரபல ஊட்டச்சத்து நிபணராக இருக்கும் இவர், ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் வழங்கி வருகிறார். இதைத் தொடர்ந்து, அட்சய பாத்திரம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில், மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல் மற்றும் அதில் நடக்கக்கூடிய குறைகளை பற்றி மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், திவ்யா சத்யாராஜ் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து திவ்யா சத்யராஜ் திமுக-வில் இணைந்து விட்டார் என்ற தகவல் பரவியது.
இதற்கு அறிக்கை வெளியிட்டு திவ்யா சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், "கலைஞர் கருணாநிதியின் இயக்கத்தில் என் அப்பா சத்யராஜ் நடித்திருக்கிறார். அப்போதிலிருந்தே எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. நான் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.
அரசியலில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் இந்த சந்திப்பில் அரசியல் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. நான் ஒரு நியூட்ரிஷனிஸ்ட்டாக எனது தொழில் பற்றியும், தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சி குறித்தும் பேசினேன். இதனை ஆர்வமுடன் கேட்ட மு.க ஸ்டாலின் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.