சென்னை: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை மாமல்லபுரத்தில் நிறைவு பெற்றது. இதில் இந்தியா பி அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், சாரின், ரனவுக், அதிபன் ஆகியோர் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்தனர்.
மேலும் தங்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவர்கள் மேல் இருந்தது. ஆனால் போட்டியின் முடிவில் இந்தியா பி அணி வெண்கலம் பதக்கம் வென்றது. போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய வீரரும் தமிழ்நாட்டைச் சார்ந்த குகேஷ், " என்னைப் பொறுத்த வரையும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேற்று நடைபெற்ற எனது போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது சமம் செய்திருந்தாலோ இந்தியா இன்று தங்கம் வெல்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும் ஆனால் அது நடக்கவில்லை.
நேற்று என்னுடைய போட்டிக்கு பிறகு நான் நொறுங்கிப் போனேன். விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வந்து பல்வேறு நிகழ்வுகள் இதுபோன்று என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்று எனக்கு ஆறுதல் கூறினார். அதற்குப் பிறகு என் மனம் சற்று அமைதியானது. மேலும் எனது பயிற்சியாளர் எனக்கு நம்பிக்கை அளித்தார்.
ஒரு வீரர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்தால் ஏதாவது ஒரு போட்டியில் தோற்பார். அது போன்று எனக்கு நடந்தது. அடுத்து அடுத்து போட்டிகளில் சிறப்பாக விளையாடுவேன். எனது விளையாட்டு துல்லியமாக உள்ளது (Accuracy game). அதை தொடருவேன். ஒரு போட்டியால் என்னுடைய துல்லியமான விளையாட்டு மாறிவிடாது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் பதக்கம் வெல்வதும் லேசான காரியம் இல்லை எனது அணியை கண்டு நான் பெருமை கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள் " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிப்பு; கூடுதலாக நீர் வெளியேற்றம்!