இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா உட்பட 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த அனுமதியை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது.
நாகப்பட்டினம் ,கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 67 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. முன்பே இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், மக்கள் விரோத மத்திய அரசும், அதற்கு அடிமை சேவகம் புரிகிற பழனிசாமி அரசும் வாய் திறக்காமல் இருந்தனர். இப்போது தேர்தல் முடிந்தவுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைப்பது குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு பக்கம் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி தண்ணீர் கூட வர விடாமல் தடுக்கும் மேகதாது அணைக்கு அனுமதி அளித்து இருக்கின்ற மத்திய அரசு, இன்னொருபுறம் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் விடாப்பிடியாக நிற்கிறது. சோமாலியா நாட்டைப்போல தமிழ்நாட்டை மாற்றுவதற்கு துடிக்கின்ற இவர்களின் திட்டங்களை ஒரு போதும் இந்த மண்ணில் அனுமதிக்க முடியாது. இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதை பழனிசாமி அரசு உறுதியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இது தொடர்பாக ஓஎன்ஜிசி உட்பட எந்த நிறுவனத்திற்கும் மாநில அரசின் சார்பில் அனுமதி அளிக்கக்கூடாது. அதையும் மீறி செயல்படுத்த துடித்தால் மக்கள் சக்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நம்முடைய வாழ்க்கை முறையான விவசாயத்தை அழித்து தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் ஏற்காது. பாதிக்கப்படும் மக்களுடன் எப்போதும் நாங்கள் துணை நிற்போம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.