சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர், அப்துல் ரஷீத். இவர் துபாயில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த அப்துல் ரஷீத், பிப்ரவரியில் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி மாலை, அப்துல் ரஷீத் தனது மனைவியுடன் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
அதில், “எங்களது வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து, எனது மனைவியின் 17 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அப்துல் ரஷீத், அவரது மனைவி வருவதற்கு முன் வீட்டிற்குள் சென்று வருவது பதிவாகியிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அப்துல் ரஷீத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மனைவியின் நகையைத் திருடி விற்றுவிட்டு, நாடகம் ஆடியதை அப்துல் ஒத்துக்கொண்டுள்ளார். அதிலும், துபாயில் இருந்து வந்த பின் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால், வீட்டில் வேலைக்குச் செல்வதுபோல் உணவை எடுத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்குச்சென்று பொழுதைப் போக்கிவிட்டு, மாலை வீட்டுக்கு வந்து மனைவியை ஏமாற்றி வந்துள்ளார். அதேநேரம் நண்பர்கள் பலர் புல்லட் வைத்திருந்ததால், தானும் புல்லட் வாங்க ஆசைப்பட்டு நகையைத் திருடியுள்ளார்.
மேலும் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அப்துல் ரஷீத், நகை விற்று கிடைத்த 2.50 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியில் செலவு செய்து அழித்துள்ளார். இவ்வாறு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அப்துல் ரஷீத் மற்றும் அவருக்கு நகையை விற்று 2.50 லட்சம் பணம் பெற்றுக்கொடுத்த அவரது உறவினர் முகமது சாயி ஆகிய இருவரையும் எழும்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்கிட்டுத் தற்கொலை - கணவர் மீது குற்றச்சாட்டு