சென்னை அருகம்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த தீபக் என்கிற பஷீர் (25) பெயிண்டராக வேலை பார்த்துவருகிறார். சில மாதங்களுக்கு முன் காதல் திருமணத்திற்காக இஸ்லாமிய மதத்திற்கு மாறி, தீபக் என்கிற தன்னுடைய பெயரை பஷீர் என மாற்றியுள்ளார். இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஷீர் முகப்பேரில் உள்ள தாய் வீட்டிலும், இவரது மனைவி மாங்காட்டிலும் தங்கிவந்துள்ளனர். இதனால் அரும்பாக்கத்தில் உள்ள வீடு காலியாக இருப்பதால் பஷீர் அடிக்கடிச் சென்று மது அருந்தி வந்துள்ளார்.
பஷீருடன் சைமன் (28) என்பவரும் பெயிண்டராக வேலை பார்த்துவந்துள்ளார். பல ஆண்டு நண்பர்களான இருவரும் வேலை இல்லாத நாள்களில் மது அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஆக. 21) மதியம் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி திருப்பூர் குமரன் தெருவில் உள்ள காலி வீட்டை சுத்தம் செய்வதற்காக பஷீரின் மாமனார் கதவைத் திறந்துள்ளார். அப்போது உள்ளே ரத்த வெள்ளத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அரும்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் காவல் துறையினர் விசாரணையில், இந்த வீட்டின் மற்றொரு திறவுகோல் பஷீரிடம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அசோக் நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த பஷீரைப் பிடித்து விசாரணை செய்ததில், இறந்துகிடந்த நபர் பஷீரின் நண்பர் சைமன் என தெரியவந்தது.
வழக்கம்போல இருவரும் ஒன்றாக வீட்டினுள் மது அருந்தியபோது குடிபோதையில் பஷீரின் மனைவியை, சைமன் தகாத வார்த்தையால் திட்டியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கோபமடைந்த பஷீர் அருகிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சைமனை சரமாரியாகக் குத்தி கொன்றுவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளது தெரியவந்தது. இதனால் பஷீரை காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு: உதவி ஆய்வாளர்கள் மீது மேலும் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு!