சென்னை: கிண்டி லேபர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (28). இவர், லோடு வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். ஏழு மாதங்களுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பரின் சகோதரியான புவனேஷ்வரி (23) என்ற பெண்ணை நித்தியானந்தம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், புவனேஷ்வரி வீட்டில் முறையாக வேலை செய்யாமல் தொடர்ந்து தனது அக்காவின் கணவர் உள்பட சிலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். பல முறை நித்தியானந்தம், புவனேஷ்வரியின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது பிஸியாக இருந்துள்ளது.
மனைவியை கத்தியால் குத்திய கணவர்:
இதனால், கோபமடைந்த நித்தியானந்தம் பல முறை புவனேஷ்வரியிடம் செல்போன் பேசுவதை தவிர்க்குமாறு கண்டித்துள்ளார். ஆனால், தொடர்ந்து புவனேஷ்வரி செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதியன்று புவனேஷ்வரி செல்போனில் யாருடனோ அதிக நேரம் பேசி கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த நித்யானந்தம் அருகிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து கழுத்து உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
காவல் துறை விசாரணை:
இதையடுத்து உடனடியாக புவனேஷ்வரியின் அண்ணனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உனது தங்கையை கொன்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், கிண்டி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், புவனேஷ்வரியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ’முந்திச் செல்வது நீயா, நானா?’ - இளைஞர் கொலை