சென்னை: ஆவடி அருகே கொள்ளுமேடு, ஒண்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (30). இவரது மனைவி மாரியம்மாள் (26). இத்தம்பதியின் குழந்தைகள் ரித்தீஷ் (6), ராகேஷ் (4). கணேசன், சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மாரியம்மாள், கணவன், குழந்தைகளை விட்டுப்பிரிந்து ஊத்துக்கோட்டை அருகே வடமதுரையில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதன்பிறகு, கணேசனிடம் இரு குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், கணேசன் குழந்தைகளை ஒப்படைக்க மறுத்துள்ளார்.
எனவே, தம்பதிக்கு இடையே பிரச்சினை மீண்டும் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் மாரியம்மாள் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, காவல் துறையினர் கணேசனை விசாரணைக்கு முன்னிலையாகும்படி உத்தரவிட்டிருந்தனர். ஆனால், அவர் முன்னிலையாகவில்லை. இரு குழந்தைகளுடன் வீட்டிலிருந்து திடீரென மாயமாகிவிட்டார்.
அவரையும் குழந்தைகளையும் உறவினர்கள் பல இடங்களில் தேடிவந்தனர். மூவரையும் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, கணேசனின் சகோதரி அனுராதா ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் கணேசனையும், இரு குழந்தைகளையும் தேடிவந்தனர்.
ஆவடி அருகே வெள்ளானூர் ஏரியில் ரித்தீஷ், ராகேஷ் ஆகிய இரு குழந்தைகளின் உடல்களும் மிதந்தன. காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், ஏரி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணேசனைத் தேடினர். அப்போது, அவர் ஏரிக்கரை ஓரமாக உள்ள முட்புதரில் இடது கை நரம்புகளை அறுத்துக்கொண்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். காவல் துறையினர் கணேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13339824_suic.jpg)
விசாரணையில் கருத்து வேறுபாடு காரணமாக, இரு குழந்தைகளையும் மனைவி மாரியம்மாளிடம், கணேசன் கொடுக்க விருப்பமில்லாமல் இருந்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த கணேசன் இரு குழந்தைகளையும் ஏரியில் மூழ்கடித்து கொலைசெய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவன் படுகொலை: மனைவி கைது!