தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா இரண்டாம் அலை காரணமாக 12ஆம் வகுப்பிற்கான தேர்வை அரசு ஒத்திவைத்தது. அதேபோல் மார்ச் 16ஆம் தேதி தொடங்கிய செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் (ஏப்ரல்.24) நிறைவடைந்தது. இதனையடுத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை இணையவழியில் நாளை பதிவேற்றம் செய்யத் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
செய்முறைத் தேர்வு முடிந்த மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மாணவர்கள் பொதுத் தேர்விற்குப் படிப்பதற்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி முதல்கட்டத்தில் செய்முறைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் கட்ட செய்முறைத் தேர்வை இன்று (ஏப்ரல்.23) முடித்த மாணவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், தேர்விற்கு வீட்டில் பாதுகாப்புடன் படிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.