சென்னை: திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுவருகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பல்வேறு மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
மேலும் ஆக்கிரமிப்புகளை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் - அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
![தமிழ்நாடு முழுவதும் கோயில் சொந்தமான நிலங்கள் மீட்பு திமுக அரசு அதிரடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14484608_t.jpg)
அதன் தொடர்ச்சியாக 540.39 ஏக்கர் நிலம், 496.1748 கிரவுண்டு சதுரடி மனைகள், 20.1434 கிரவுண்டு கட்டடம், 46.2077 கிரவுண்டு திருக்குளக்கரை ஆகியவை 991 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி ஆகும்.
கும்பகோணம் மாவட்டம் அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயிலுக்கு அருகே உள்ள வெங்கடாஜலபதி திருக்கோயிலுக்குச் சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டிருந்த 6.9 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் அருகே, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்குச் சொந்தமான 55 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
![தமிழ்நாடு முழுவதும் கோயில் நிலங்கள் மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-hrnce-7209106_16022022115928_1602f_1644992968_505.jpg)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், கந்தசுவாமி பாளையம் அருள்மிகு கன்னமார் கருப்பண்ண சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.75 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தைச் சார்ந்த மதுரா சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அருள்மிகு சிதம்பரம் சபாநாயக்கர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பூதிப்புரம் கிராமம், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான வி. புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள 31.86 ஏக்கர் / செண்ட் புன்செய் நிலமானது தனிநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
![தமிழ்நாடு முழுவதும் 2043 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14484608_k.jpg)
இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு திருக்கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் தற்போது திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுவருகின்றன.
அடுத்தகட்ட நடவடிக்கையாகத் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு HRCE என்ற நில அளவை கல் பதிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
![தமிழ்நாடு முழுவதும் கோயில் நிலங்கள் மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-hrnce-7209106_16022022115928_1602f_1644992968_695.jpg)
இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ள திருக்கோயில் நிலங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்பு நபர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் மற்றும் கட்டளைகளுக்குச் சொந்தமான நிலங்களைத் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறவும், கட்டளை மற்றும் திருக்கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு எம்பிகளைப் பார்த்துப் பயப்படும் மோடி! - சொல்கிறார் ஆ. ராசா