கரோனா தொற்று காரணமாக 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்கள், 11 ஆம் வகுப்பில் சேர தகுதி குறித்து அறிய 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா முதல் அலையால் கடந்த ஆண்டு தொடக்கம் முதல் பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாக செயல்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த ஜனவரியில் தொற்று வெகுவாக குறைந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் 12 ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், இரண்டாம் அலை பரவல் அதிகரிப்பால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு 12 ஆம் வகுப்புக்கு சென்று விடுவார்கள். ஆனால் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் பிரிவுகளை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் தங்கள் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் 11ஆம் வகுப்பு அனுமதி என்கிற உத்தரவை பெற்றுவிட்டனர்.
ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி என்றால் 35 மதிப்பெண்கள் மட்டுமே வழங்க முடியும். இதையடுத்து மாணவர்கள் தகுதியை உயர்த்திக்கொள்ளவும், விரும்பிய பாடப்பிரிவை தேர்வு செய்யவும் உதவும் வகையில் மாநில அளவில் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
அதன்படி பத்தாம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற விரும்பினால் மாநில அளவிலான தேர்வில் கலந்துகொண்டு மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம் என ஆலோசித்துள்ளனர். இதுகுறித்து அரசிற்கு தெரிவிக்கப்பட்டு, அந்த முடிவின் அடிப்படையிலேயே இது நடைமுறைக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.