கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்ட கல்லூரி பருவத்தேர்வுகளுக்கான கட்டணத்தைச் செலுத்தும்படி அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு 42 ரூபாய் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நான்கு லட்சம் மாணவரிடமிருந்து 13 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் வாதிட்டார்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மார்ச் 27ஆம் தேதிக்கு முன்பே கல்லூரிகள் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்துவிட்டதாகவும், தேர்வு கட்டணத்தைப் பொறுத்தவரை தேர்வுக்கு முந்தைய செலவு தேர்வுக்குப் பிந்தைய செலவு என சில வகைகள் உள்ளதாகவும், தேர்வு ரத்துசெய்யப்பட்டாலும், மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து அவற்றை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பிவைப்பது போன்ற செலவுகளும் உள்ளதாக குறிப்பிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேர்வுக்கு ஆகக்கூடிய செலவினங்கள் பட்டியலில் தேர்வு நடத்திய பிறகு விடைத்தாள்களைத் திருத்துவது உள்ளிட்ட தேர்வுக்குப் பின்னர் செலவினங்கள் எப்படி கணக்கிடப்பட்டன என விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.