சென்னை: உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி என பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் இந்த ஐந்து வகையான டீக்கள் உங்களுக்கு உதவலாம்.
பொதுவாக டீ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதில் சில வகையான டீக்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்து வகையான டீக்களையும் அளவோடு எடுத்து உடல் ஆரோகியத்தை பாதுகாக்க வேண்டும்.
கிரீன் டீ: கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு கிரீன் டீயை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கிரீன் டீயை அதிகமாக குடித்தால், பக்கவிளைவுகளுடன் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனை அளவாக தினமும் குடித்து வர பாதுகாப்பான வழியில் உடல் எடை குறையும்.
பிளாக் டீ: வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் பசியை அடக்குகிறது. பிளாக் டீயில் பாலிஃபீனால்களும் உள்ளன, இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கவும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும்.
இலவங்கப்பட்டை டீ: பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வாசனை தரும் மசாலா பொருளாகும். இதில் குறைந்த அளவிலேயே கொழுப்பு உள்ளதால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இலவங்கப்பட்டை சாறு உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுவதுடன் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
இலவங்கப்பட்டையில் உள்ள பாலிபினால்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையை ஆப்பிள் சைடர் வினிகர், ஓட்ஸ், மஞ்சள் பால், டிடாக்ஸ் நீர், தேன் கலந்த டீ ஆகியவற்றில் கலந்து குடிக்கலாம்.
பெப்பர்மின்ட் டீ: புதினா இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் புதினா டீயானது பெப்பர்மின்ட் டீ என்று அழைக்கப்படுகிறது. புதினா எண்ணற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. பெப்பர்மின்ட் டீ என்பது உடல் எடையை குறைக்க உதவும் புத்துணர்ச்சியூட்டும் தேநீர். பெப்பர்மின்ட் டீ செரிமானத்திற்கும் உதவுகிறது. புதினாவில் மெந்தோல் உள்ளது. இது பசியை குறைக்க உதவுகிறது. மேலும் இந்த டீ குடிப்பது உடல் எடை மற்றும் உடல் கொழுப்பை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஊலாங் டீ: உடல் கொழுப்பைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் ஊலாங் டீ உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனவே, இது உடல் பருமன் ஆபத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு பெரும் பங்களிக்கிறது. ஆய்வுகளின்படி, இந்த தேநீர் உங்கள் உடல் எரிக்கும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: நெய் கூந்தலுக்கும், சருமத்திற்கும் சிறந்ததா.? பயன்படுத்திப் பாருங்கள்.!