சென்னை தலைமைச் செயலகத்தில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் இன்று (பிப்.13) ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா சங்கர், முதலமைச்சர் பழனிசாமியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துர்கா சங்கர் மிஸ்ரா, ’சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நகரத்திலுள்ள அனைத்து பணிகளையும் செயல்படுத்துவதோடு, கண்காணிக்கவும் முடியும். இது நகரின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் தகவல்களை பெறமுடியும். இது போலவே தமிழ்நாட்டில் மேலும் 10 நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு நகரமயமாக்கல் அதிகமாக உள்ள மாநிலமாகும். 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 50விழுக்காடு நகரமயமாகிவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 'அம்ருத்' திட்டத்தின் மூலம் 12 லட்சம் கோடி ரூபாய் சுத்தமான குடிநீர், கழிவுநீர் அகற்றுதல், பாதாள சாக்கடை திட்டம், பசுமையாக்கும் நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 11 நகரங்களில் உள்ள மக்களுக்கு நாள்தோறும் 135 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 12 நகரங்களில் உள்ள மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை நகரில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை நாளை(பிப்.14) ஆய்வு செய்வேன்.
12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. 4 லட்சம் கோடி ரூபாய் அதற்கான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது சென்னையில் பாண்டிபஜாரில் செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் மக்களுக்கு மிகுந்த பயனை அளித்துள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் சேலத்திற்கு இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகுந்த பயனளிக்கும். ஸ்மார்ட்சிட்டி திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளும் உயரும். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் தேவைப்படுமாயின் அதற்கு மத்திய அரசு உதவ தயாராக உள்ளது’ என்றார்.
இதையும் படிங்க: 'மாநில அரசு, மத்திய அரசின் கொத்தடிமை அரசாக உள்ளது' - வைகோ குற்றச்சாட்டு