சென்னை: சென்னயின் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று (செப்.1) வீட்டுவசதி, சமூகநலத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது வீட்டுவசதி, சமூகநலத் துறை தொடர்பான அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உணவகம், இரவு தங்கும் விடுதி விரைவில் திறப்பு
கோயம்பேடு மொத்த அங்காடி வளாகத்திற்குள் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் உணவகம், இரவு தங்கும் விடுதி ஆகியவை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற அக்டோபர் 2021ஆம் ஆண்டு கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு, தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் செயல்பாடுகளை நெறிப்படுத்த எந்த நோக்கத்திற்காக சங்கங்கள் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை பூர்த்தி செய்யாத, நலிவடைந்த 262 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் கலைக்கப்படும்.
வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் போதுமான, பாதுகாப்பான வாங்கும் திறமைக்கேற்ற வீட்டுவசதி, அடிப்படை வசதிகள் பெறுவதை உறுதி செய்தல், குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் ஆகியவை நிலையான மேம்பாட்டிற்கான இலக்குகளாக உள்ளது.
இரு பேருந்து முனையங்கள் திறப்பு
கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையங்கள், வருகின்ற 2022ஆம் ஆண்டு முதல் செயல்படும். கிளாம்பாக்கத்தில் ரூ. 393.74 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, தெற்கு நோக்கிச் செல்லும் வழித் தடங்கள் மார்ச் 2020 முதல் இயக்கப்படும்.
குத்தம்பாக்கத்தில் ரூ. 336 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து முனையம் கட்டி முடிக்கப்பட்டு, மேற்கு நோக்கி செல்லும் வழித்தடங்கள், வருகின்ற அக்டோபர் 2022ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும்.
பட்டினப்பாக்கத்தில் எதிர்கால வணிகம், பொழுதுபோக்கு மையத்தை உருவாக்க, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முன்மொழிந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் இத்திட்டத்தை முன்னெடுக்க முழுமையான தொழிநுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகாமையில் கண்ணியமான வீட்டு வசதி அளித்து 25 ஆண்டுகளுக்கு பராமரிக்க பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படும்.
இதனை தமிழ்நாட்டில் செயல்படுத்தி நிர்வகிக்க ஒன்றிய அரசுடன், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் ஆகிய நகரங்களில், இந்த நிதியாண்டில் திட்டம் தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிசை மாற்று வாரியம் இனி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - முதலமைச்சர் அறிவிப்பு