சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், எம்ஜிஆர் நகர் அருகே ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு நேற்றிரவு (ஜூன் 12) ஸ்கார்பியோ (Scorpio) காரில் ஏழு நபர்கள் வந்துள்ளனர். காரில் இருந்து இறங்கிய மூன்று பேர் உணவகத்திற்கு சென்று பரோட்டா மற்றும் வறுத்த கறி கேட்டுள்ளனர்.
அப்போது வறுத்த கறியில் மசாலா பத்தவில்லை எனக்கூறி முதலில் ஊழியரை தாக்கியவர்கள், பின்னர் உரிமையாளர் ராஜாவையும் தாக்கியுள்ளனர். இதனைத் தட்டிக் கேட்க வந்த வழக்கறிஞர் ஒருவரையும் தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு காரில் ஏறி, தப்பிச் சென்றனர்.
உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கடையில் இருந்த கண்காணிப்புக்கேமராக்களை ஆய்வு செய்து, ரகளையில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் கடத்திச்சென்று இளைஞர் எரித்துக்கொலை; நெல்லையில் காவலர் உட்பட இரண்டு பேர் சரண்