சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பதே இவர்களுடன் ஒற்றை கோரிக்கையாக இருக்கிறது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் திமுக எதிர்க்கட்சி ஆக இருந்த பொழுது இவர்களின் கோரிக்கை தீர்க்கப்படும் என நேரில் சென்று தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த 27ஆம் தேதி 3ஆவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை நேற்று பாதிக்கத் தொடங்கியது. 70-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையிலும், உண்ணாவிரதப் போராட்டக் களத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2009 மே 31ஆம் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது 2009 ஜூன் 1ஆம் தேதி முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது.
அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருமுறை உண்ணாவிரதம் இருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியைகள் கூறும்போது, ’சமவேலைக்கு சம ஊதியத்தை வழங்க வேண்டும். சமூக நிதி ஆட்சி நடக்கிறது என கூறும் முதலமைச்சர் ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் சமமாக வழங்க வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்கு கையொப்பம் போட்டது போல், முதலமைச்சரும் கையொப்பம் போட வேண்டும். எங்களின் கோரிக்கை எப்பொழுது நிறைவேறும் என்பதை தெரிவிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:போராட்டம் தொடரும்: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!