சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மன்சூத் என்பவரின் மனைவி சோனியாவிற்கு, டிசம்பர் 5ஆம் தேதி குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்ததுள்ளது. இதனையடுத்து, தாயையும் சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமான பெருமழையின் தாக்கத்தால் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் கிடைக்காத நிலையில் வெகுநேரம் போராடி புளியந்தோப்பில் உள்ள G3 மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனை பூட்டப்பட்டிருந்த நிலையில் சிசு இறந்தது.
இது காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தாய்க்குச் சிகிச்சை அளிக்க காவல்துறையினர் உதவியுடன் அருகிலுள்ள முத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது சிகிச்சைக்கான கருவிகளும் மருத்துவரும் இருந்தாலும் மின்சாரம் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனையடுத்து, செளவுமியாவுக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு, அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், குழந்தையின் உடலை 5 நாட்களாகத் தராமல் அலைக்கழித்தாக மன்சூத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், குழந்தையின் உடலை ஒப்படைக்க ரூபாய் 2500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (டிச.10) புளியந்தோப்பு காவல்நிலைய காவலர்கள் மூலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடல் தந்தை மன்சூத் பாஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இறந்த குழந்தையை, ஷரூட் (Shroud) என சொல்லப்படக்கூடிய துணியில் கூட சுத்தி கொடுக்காமல் அட்டைப் பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அவரது தந்தை எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, உயிரிழந்த குழந்தையின் உடலைப் பிணவறை உதவியாளர் சரியாக மூடப்படாமல் பெற்றோர்களிடம் வழங்கியதாகப் புகார் எழுந்ததன் அடிப்படையில் பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணி இடைநீக்கத்தில் இருப்பார் எனச் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தந்தை மன்சூத் இச்சம்பவம் குறித்துத் தெரிவிக்கும் போது, முதல் குழந்தை பிறந்த போதும் இதே போன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில் அப்போது எப்படியோ காப்பாற்றி விட்டோம். ஆனால், இந்த முறை காப்பாற்ற முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எழுத்தாளர் தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!