சென்னை: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில் 69 ஆவது தேசிய திரைப்பட விருது இன்று (ஆக.24) மாலை அறிவிக்கப்பட்டது.
இந்த முறை 2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகவும் கடுமையாக போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வந்தவுடன் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி என்ற பிரிவில் தேசிய விருது வென்றது.
இப்படத்தில் சிறப்பாக நடித்த மறைந்த நல்லாண்டி தாத்தாவுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல், ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ என்ற பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோலிவுட் திரையுலகில் இந்த வார ரிலீஸ் பற்றி சிறப்பு பார்வை!!
ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் விருது பெறவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இ.வி.கணேஷ் பாபு இயக்கிய ‘கருவறை’ என்ற குறும்படத்திற்கு இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லெனின் பாரதி இயக்கியுள்ள ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ என்ற ஆவண படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நிறைய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு ஒரு சில விருதுகளே கிடைத்துள்ளன. அதுவும் கடைசி விவசாயி படம் மட்டுமே இரண்டு விருதுகள் பெற்றுள்ளன. இரவின் நிழல் படத்துக்கு விருது கிடைத்தாலும் அது ஸ்ரேயா கோஷலுக்கு என்பதால் ரசிகர்கள் அதனை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
இதனால், தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இருந்தாலும் விருது பெற்ற கலைஞர்களுக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 69-வது தேசிய விருது.. விருதுபெற்ற படங்கள் என்னென்ன?