நாட்டில் மின்சார வாகன சேவையை ஊக்குவிக்க, ஐஐடி மெட்ராஸ் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது. ஐஐடி வளாகத்தில் மாணவர்கள், அலுவலர்கள் நலனுக்காக மின்சார பேருந்து சேவையை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அசோக் லேலண்டு மற்றும் ஹிட்டாச்சி ஏபிபி பவர் கிரிட்ஸ் நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த மின்சார பேருந்தில் புதுமையான ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. கிரிட்-இமொஷன் டிஎம் ஃப்ளாஷ் சாதனம் அசோக் லேலண்டு சார்பில் வழங்கப்படுகிறது.
இது குறித்து இந்தியாவில் ஹிட்டாச்சி ஏபிபி பவர் கிரிட்ஸின் நிர்வாக இயக்குநர் வேணு கூறுகையில், "இந்தியாவில் மின்சார வாகனம் புரட்சியை ஏற்படுத்தும் வலுவான மற்றும் நம்பகமான உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கிட டெக்கிஸ், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரையும் நாம் கொண்டிருக்க வேண்டும். இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள எங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் புகை வெளிவராத பேருந்தை வழங்க அசோக் லேலண்ட் மற்றும் ஐஐடி மெட்ராஸ் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
இது தொடர்பாக அசோக் லேலண்ட் தலைமை தொழில்நுட்ப அலுவலர் சரவணன் பேசுகையில், "பேருந்து பிரிவின் புதுமையில் பங்கெடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பேருந்துகளுடன் மின்சார உந்துவிசை தொழில்நுட்பம் மற்றும் ஹிட்டாச்சி ஏபிபி பவர் கிரிட்களிலிருந்து ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இணைக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் நிலையான பொது போக்குவரத்தின் தேவைகேற்ப அமைந்திடும்" எனத் தெரிவித்தார்.
ஐஐடி வளாகத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ள மின்சார பேருந்துகளுக்கு மாணவர்கள், ஐஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.