சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் காவலர் கிறிஸ்டோபர் வாட்ஸ்அப் குழு ஒன்றில் மதம் தொடர்பான பாடல் ஒன்றை பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரன் அக்குழுவில் ஆடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் இது இந்திய நாடு, ராமஜென்ம பூமியில், மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியுள்ளோம், இஸ்லாமியர்கள் முடிந்தால் தடுத்து பாருங்கள். இங்கு இருக்க பிடிக்கவில்லை என்றால், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு செல்லுங்கள் என தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் இந்து முன்னனி அமைப்பினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பினர் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஓன்றை அளித்துள்ளனர்.
அதில், "வாட்ஸ்அப் குழுவில் இந்துக்களை அவமதித்து, கிருஸ்துவ பாடலை பதிவிட்ட முன்னாள் காவலர் கிறிஸ்டோபர் மீது முதலில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வாளர் என்ன பதிவு செய்தாரோ அதனை முழுமையாக வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்படைத் தன்மையாக அது வெளியிடப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பெரும்பான்மை இந்துக்களான பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக காவல் துறையிலும் இந்துக்களாக பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகள், ஆய்வாளர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, இந்துக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக" புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரத் இந்து முன்னனி மாநில பொருளாளர் அருண், "திமுக அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், இந்துகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் குழுவில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பாடல் பதிவிட்ட கிறிஸ்டோபர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர் நிகழ்ச்சியில் பங்குபெறுவதுடன், அவர்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அவர் இந்துகள் பண்டிகைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது கிடையாது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது கூட முதலமைச்சர் ஒரு வாழத்து கூறுவதில்லை" என கூறினார்.
இதையும் படிங்க: மத உணர்வை தூண்டும் வகையில் பேசி 'சஸ்பெண்ட்' ஆன காவலர்... சம்பவத்தின் பின்னணி என்ன?