தமிழக ஒற்றுமை மேடை சார்பாக 'குடியுரிமை பாதுகாப்பு மாநாடு' சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோப்பன்னா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டிற்கு பேராசிரியர் நன்னன் தலைமை தாங்கி உரையாற்றினார். மாநாட்டில் மத்திய அரசே குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவேண்டும், குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், ஷாஹின்பாக் போராளிகளுக்கு வீர வணக்கம் என மொத்தம் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் இந்து குழுமம் தலைவர் என்.ராம் பேசுகையில், "இந்த மாநாட்டில் கலந்துகொள்வது மகிழ்ச்சி என்று கூறுவதைவிட முக்கியமான கடமை என்றுதான் கூற வேண்டும். மத்திய அரசு எதிர்பார்த்தது போல் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவாக பேசவில்லை. இன்று நாட்டு நிலைமை சரியாக இல்லை. இதற்கு மோடி, அமித்ஷா மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளே காரணம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இந்தளவிற்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் இது இந்து - இஸ்லாமியர்கள் பிரச்னை இல்லை. இது ஒவ்வொரு இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய அரசியல் அமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை. இதிலிருந்து ஒன்றை எடுத்துவிட்டாலும் அது மிகப்பெரிய தவறு. இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை நிராகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம்.
இந்திய ஜனநாயகத்திற்கு இந்த சட்டத்தினால் அவமானம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு பிறகு என்.ஆர்.சி அமல்படுத்தப்படும் என்று தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பாகவே அமித்ஷா தெளிவாக கூறினார். எனவே, என்.ஆர்.சியை அமல்படுத்த திட்டம் இல்லையென்று தற்போது அமித்ஷா கூறுவது முற்றிலும் பொய்யானது.
இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அவர்களுக்கு விருப்பம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இதில், இலங்கைத் தமிழர்கள் இணைக்கப்படவில்லை என்பது தவறு. என்.பி.ஆர்-ஐ தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்காமல் இருக்க வேண்டும்.
ரஜினிகாந்த் குடியுரிமை சட்டம் பற்றி எவ்வளவு ஆழமாக படித்தார் என்று தெரியவில்லை. இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக நிற்பேன் என்று கூறினார். தற்போது டெல்லியில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்களைக் காப்பதற்கு அவர் செல்வாரா? அவர் மீண்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து படித்து தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி தாக்குதலைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்!