தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பர். குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அதிக அளவில் இருப்பர். இதற்காக தீபாவளி சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் தென்னக ரயில்வேயும் தீபாவளி சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஆனால் இவை போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.
சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரத்திலேயே டிக்கெட்களின் முன்பதிவு நிறைவடைந்தது. அதில் சில ரயில்கள் காலை நேரத்தில் கிளம்புவதால் அலுவலக பணி முடித்து ஊருக்கு புறப்படுபவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேபோல் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அது அனைத்துப் பகுதிகளிலும் போதிய அளவுக்கு இல்லை. குறிப்பாக மக்கள் அதிகம் செல்லும் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் கூடுதல் பேருந்துகளை இயக்கினால் தான் திட்டமிடாமல் கடைசி நேரத்தில் ஊருக்குச செல்பவர்கள் சிரமமின்ற செல்ல முடியும்.
அதே நேரத்தில், மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் குறைவான அளவிலேயே உள்ளது. கோயம்பேடு இணையதள முன்பதிவு மையத்திற்கு வந்த உமர் என்ற பயணி கூறுகையில், எனது சொந்த ஊர் ஈரோடு. சொந்த ஊருக்கு செல்ல சாய்வு வசதிகொண்ட சொகுசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காததால் சாதாரண பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் தனியார் பேருந்திலேயே செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதுபோன்று பலரும் பயணம் மேற்கொள்கிறார்கள் என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்றார்.
குறிப்பாக புஷ் பேக் என்று அழைக்கப்படும் சாய்வு வசதிகொண்ட அரசு சொகுசுப் பேருந்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு 550 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே வசதிகொண்ட தனியார் பேருந்தில் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்துகளில் 700 ரூபாய் மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படும்.
அதேபோல் மதுரைக்கு குளிர்சாதன படுகை வசதிகொண்ட பேருந்துக்களில் ஆயிரத்து 700 ரூபாயில் தொடங்கி 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கன்னியாகுமரிக்கு 2 ஆயிரத்து 600 ரூபாய்க்கு மேலும், கோவை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் தற்போது பேருந்து கட்டணமே விமான கட்டணத்தின் அளவுக்கு உயர்ந்துள்ளது.
26ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் என்றாலும், வெள்ளிக்கிழமையுடனே பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் நிறைவடையும் என்பதால் பயணிகள் அதிகளவில் பயணிப்பார்கள் என்பதால் அன்று இரவு டிக்கெட் விலை உச்சத்தில் உள்ளது. "நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் பேருந்தில் ஊருக்குச் சென்று வந்தால் ஏற்படும் செலவை நினைத்துப் பாருங்கள்" என்கிறார் சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தின் பணிபுரியும் ராகேஷ்.
பெரும்பாலானவர்கள் இணையதளம் மூலமாகவோ, செல்போன் செயலி மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்வதால் பேருந்து கட்டணத்தின் முன்பதிவுக் கட்டணம், அதற்கு மேல் ஜிஎஸ்டி என்று கற்பனைகூட செய்துபார்க்க முடியாத அளவுக்கு சாதாரண நடுத்தர மக்கள் மோசமான நிலைக்கு தள்ளுகிறது பேருந்து கட்டணம்.
மேலும் வழக்கமாக செல்லும் பேருந்துகள் தரமானதாக இருந்தாலும் இதுபோன்ற தேவை அதிகமாக இருக்கும் நேரத்தில் தர குறைவான பேருந்துகள் அதிக கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு, தனியார் பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதனை செவி மடுக்குமா அரசு? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:ரூல்ஸ் னா ரூல்ஸ் தான்... தவறான பாதையில் வந்த பேருந்துக்கு வழிவிடாத இளம்பெண்!