சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி. சாஹியின் பதவிக்காலம் நேற்றுடன் (டிச. 31) முடிவடைந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான கொலிஜியம் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் இந்தப் பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக வருகிற திங்கள்கிழமை (ஜனவரி 4) சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த நீதிபதி வினித் கோத்தாரி குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நாளை (ஜனவரி 2) காணொலி காட்சி மூலம் பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது.