சென்னை: போக்குவரத்து நெரிசலை உடனுக்குடன் போக்குவரத்து காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, புதுவித நவீன முறை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஆகியவற்றைத் தடுக்க சென்னை காவல்துறை அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியும் வருகிறது.
அந்த வகையில் அதிவேகமாகச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு செக் வைக்கும் வகையில் சென்னை காவல்துறை புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சாலைகளில் வாகன வேக கட்டுப்பாட்டு கருவி மூலமாக வாகனத்தின் வேகத்தைக் கண்டறிந்து ஏ.என்.பி.ஆர் சிசிடிவி மூலமாக உடனடியாக அபராதம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் 30 இடங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு, முதல் கட்டமாக 10 இடங்களில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாகப் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.
காலை 7மணி முதல் இரவு 10மணி வரையில் 40கிமீ வேகத்திலும், இரவு 10மணி முதல் காலை 7மணி வரை 50கிமீ வேகத்திலும் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும் என்றும் மீறினால் அதிவேகமாகச் சென்றதாக 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் செல்போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல போக்குவரத்து காவல்துறை மாண்டர்க் டெக்னாலஜிஸ் பிரைவெட் லிமிடெட் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து 1கோடி செலவில் நேரடி போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் நவீன முறை செயல்பாட்டினை அறிமுகப்படுத்தி உள்ளது.
300 சந்திப்புகளில் 1000 சாலைகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் போக்குவரத்து நெரிசல்கள், சம்பவங்கள் மற்றும் பயண நேரங்கள் குறித்த தகவலை உடனுக்குடன் போக்குவரத்து காவல்துறை கட்டணம் செலுத்தி கூகுள் மேப் மூலம் அறியப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துகள், கட்டுமான பணிகள், ஒரு வழிப்பாதை மாற்றம், தடைப்பாதை ஆகியவற்றின் தகவல்களைப் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக பெற்று சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை மாற்ற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுவதற்கு எளிதாக இந்த முறை உதவும் எனச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சென்னையில் முதல்முறையாக பகலில் 40கிமீ வேகத்திலும், இரவு 10 மணிக்கு மேல் 50 கிமீ வேகத்தில் மட்டுமே வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட குறுஞ்செய்தி அவர்களது கைப்பேசிக்கு அனுப்பும் வகையில் புதிய தொழிற் நுட்பத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக டாக்டர் குருசாமி பிரிட்ஜ், அமைந்தகரை புல்லா அவென்யூ, மதுரவாயல் ஜங்ஷன், ஈஞ்சம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட 10 இடங்களில் அதிவேக தடுக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாக 20 இடங்களில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் சென்னையில் எத்தனை வேகத்தில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும் என முன்னதாகவே போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படியே தற்போது போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாகத் தொடர்ச்சியாக ஒரு இடத்தில் அபராதம் வந்தால், இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதி அதில் வேகமாற்றம் செய்வதற்கான நடைமுறையில் ஈடுபட வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் சாலைகள் காலியாக இருக்கும் பட்சத்திலும் 40 கிலோ மீட்டர் மேல் வேகத்தில் செல்லக்கூடாது” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் பேசிய அவர்,"போக்குவரத்து நெரிசலை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் கூகுள் மேப்பிலிருந்து டேட்டா பெற உள்ளது. இதனால் உடனடியாக நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க முடியும்” எனக் கூறி சாலை விபத்தைக் குறைக்க உதவும் புதிய தொழில் நுட்பங்களைப் போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் வழங்கினார். 5 கோடி செலவில் முதற்கட்டமாக 68 எல்.இ.டி சிக்னல்கள் வாங்கப்பட்டு மாற்ற இருக்கின்றன. இதே போல 7 கோடி 6 லட்சத்து 15 ஆயிரம் செலவில் 250 இ-செலான் இயந்திரம், பேப்பர் ஸ்ட்ரா, ஸ்பீடு ரேடார் கண் உட்பட 11 போக்குவரத்து உபகரணங்களைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து உபகரணங்களை வழங்கி இந்த செயல்பாட்டினை துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: Minister Ponmudi: அமைச்சர் பொன்முடிக்கு புதிய சிக்கல்.. விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!