தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறையாக கையாள உரிய உரிமம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் உமாராணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, மருத்துவ கழிவுகளை கையாள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து எந்த மருத்துவமனையும் உரிமம் பெறவில்லை எனவும், மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளததால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுவதுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கழிவுகளை கையாள மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படுகிறதா? என்பதை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என, சுகாதாரத் துறை செயலருக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் உத்தரவிட்டனர்.