சென்னை திரு.வி.க. நகரைச் சேர்ந்த வில்லியம் மோசஸ் என்பவர், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். நீதிபதிகளின் உத்தரவின்படி அண்மையில், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அம்மன் கோயில் இடிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ அரசாணையின் அடிப்படையில் சாலை இருக்க வேண்டும். சாலையின் ஒரு பகுதியில் 28 மீட்டர் இருக்கும் நிலையில் பல இடங்களில் 16 மீட்டராகவும், 15.3 மீட்டராகவும் சாலை குறுகியுள்ளது என்பது ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கடந்த 1984 அரசாணையைப் பார்க்கும்போதுதான் சாலையின் உண்மை நிலை தெரிய வரும். எப்படி சட்ட அங்கீகாரம் இல்லாமல் சாலையை ஆக்கிரமித்த பகுதிகளுக்குள் பட்டா வழங்கப்பட்டது?
இங்கு தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, இன்னும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது தெரியவருகிறது. எனவே சென்னை மாநகராட்சி இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, வருகிற 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.