மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஐடிஎன்எல்., (ஐ.எல்.&எஃப்.எஸ். டிரன்ஸ்போர்டேஷன் நெட்வொர்க்) நிறுவனத்தின் ஆறு மாத பங்கு ஈவுத் தொகையாக, சுமார் ரூ.200 கோடியை 11.8 சதவீத வட்டியுடன் வழங்குவதாக, 63 மூன் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
இருப்பினும், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தத்தை மீறி, ஐடிஎன்எல் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக, 63 மூன் நிறுவனத்தின் சார்பில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில் ஐடிஎன்எல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த ராம்சந்த் கருணாகரன் கைது செய்யப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி ராமச்சந்த் கருணாகான் தாக்கல் செய்த மனுவும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரும் காவல்துறை மனுவும் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில், தங்களுடைய நிறுவனத்தை மத்திய அரசு கையகப்படுத்தி உள்ளதாகவும், நிதி மோசடி எனக் கூறி, இவ்வழக்கில் கைது செய்ய முடியாது என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது காவல் துறை தரப்பில், நிதி முறைகேடு தொடர்பாக ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருதரப்பு விசாரணைக்குப் பின்னர் நீதிபதி லிங்கேஸ்வரன், பண மோசடி வழக்கில் கைதான ராம்சந்த் கருணாகரன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்கப் பொருளாதார குற்றப் பிரிவுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டார்.