சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மாத்துல் உலமா தலைவர் மவ்லவி காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் கூடிய இஸ்லாமிய கூட்டமைப்பு, இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இதனிடையே, சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, தனிநபர் ஒருவர் தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மார்ச் 11ஆம் தேதி வரை இந்த போராட்டத்தை நடத்த தடை விதித்துள்ளது. மேலும் இம்மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், தமிழ்நாடு டிஜிபி, காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், காவல் ஆய்வாளர் ஆகியோரை விரைந்து பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
எனினும் போராட்டம் நடத்துவதற்கென அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பினர் வழியே அறிய முடிகிறது. சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் அதேநாளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகையிட போவதாகவும் அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேசிய கொடி ஏற்றிய இஸ்லாமியர்கள்