சென்னை: கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் நாடு முழுவதும் உள்ள அச்சு, காட்சி ஊடகங்களில் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்த்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதி கேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதற்கும் பொருந்தும். ஒன்றிய அரசு நீதிமன்ற உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என குற்றஞ்சாட்டினார்.
பின்னர் பேசிய தலைமை நீதிபதி, “ஊடகத்தை கண்காணிக்கும் நடைமுறை, ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைத் துறையின் குரல் வளையை நெரிப்பதற்கு சமம். உச்ச நீதிமன்றம் தடை விதிக்காதபட்சத்தில், வழக்கின் விசாரணை அக்டோபர் நான்காம் வாரத்தில் நடைபெறும்” எனக் கூறி புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இதையும் படிங்க: 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு