சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாக கடைகள் சீல் வைக்கப்பட்டது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உணவுப்பொருட்கள், தின்பண்டங்கள்,விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள், பிளாஸ்டிக் பைகளில் புகுத்தி விற்கப்படுவதாகக் கூறி நீதிபதிகளிடம் காண்பித்தார்.
மேலும், அவர் மஞ்சள் பை திட்டம் கொண்டு வந்தாலும் 15 பொருட்கள் பிளாஸ்டிக்கில் வைத்து விற்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அலுவலர்கள் கடும் நடவடிக்கை எடுத்து, பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துவருவதை தடுக்காதவரையில், அவற்றைப் பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலனில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாகக்கூறி சில்லறை வியாபார கடைகளை மூடும் நிலையில், அரசு பிளாஸ்டிக்கில் பொருட்களை விற்பனை செய்யலாமா? என நீதிபகள் கேள்வி எழுப்பினர். ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை பிளாஸ்டிகில் அடைத்து மஞ்சள் பையில் வழங்குவதால் எந்தப் பயனும் இல்லை.
அரசு நடத்தும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எப்படி தடையை அமல்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பால் ஏன் முன்பு போல பாட்டில்களில் விற்கக்கூடாது' எனவும், பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கள் பயன்படுத்தப்படுகிறது எனவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 13க்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: Video: எடப்பாடியை கலாய்த்த உதயநிதி - ஓபிஎஸ் கூறிய அதிரடி பதில்!