சென்னை: மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் பாரம்பரியமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையும், நாளை 11 மணி முதல் மாலை 4 மணி வரையும் என மொத்தம் 2 நாட்கள் நடைபெறும்.
இந்த பாரம்பரிய வாகன கண்காட்சியில் மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டரிங் கிளப்பின் உறுப்பினர்கள் தங்கள் பாரம்பரியமான பல்வேறு வாகனங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இன்று (டிச.17) தொடங்கிய இந்த கண்காட்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 80 பாரம்பரியமிக்க கார்கள் மற்றும் 25 மிகப் பழமையான மோட்டார் சைக்கிள் வாகனங்களைப் பார்வையிட்டார்.
குறிப்பாக டிஜிபி அவரது கவனத்தை ஈர்த்த பென்ஸ் நிறுவனத்தின் படைப்பான 1886 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பேடண்ட் மோட்டார்வேகன்" என்ற பழமையான வாகனம் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் படைப்பான 1896 ஆம் ஆண்டு முதல் 1901 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டிலிருந்து வந்த "குவாட்ரிசைக்கிள்" என்ற வாகனங்களின் மாதிரி வாகனங்களை நேரடியாக தானே ஓட்டிப்பார்த்து அதன் செயல்திறன்களை ஆய்வு செய்து வடிவமைப்பைப் பற்றி கேட்டறிந்தார்.
கோயம்புத்தூரில் உள்ள யு.எம்.எஸ் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட பென்ஸ் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் பழமையான வாகனங்களுடைய இந்த கண்கவரும் இரு மாதிரிகள் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாகவும் இவை பார்க்கப்படுகிறது.
அதேபோல மோட்டார் சைக்கிள் வாகனங்களைப் பொறுத்தவரை 1944ஆம் ஆண்டின் ஜேம்ஸ், 1946ஆம் ஆண்டின் டிரம்ஃப் 350CC, 1954ஆம் ஆண்டின் பி.எஸ்.ஏ பேண்டம், 1955 ஆம் ஆண்டின் டிரம்ஃப் டைகர் 100CC, 1956 ஆம் ஆண்டின் லேம்பிரெட்டா எல்.டி, 1967 ஆம் ஆண்டின் எம்.வி அகஸ்டா 150CC போன்ற பழமையான மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியைக் காண அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேரடியாக வந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களைக் கண்டும், அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இது குறித்து பார்வையாளர் ராமச்சந்திரன் கூறுகையில், “இந்த கண்காட்சியைக் காண கோவையிலிருந்து குடும்பத்துடன் வந்துள்ளோம். மிக சிறப்பான முறையில் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். 1886 - 1970 ஆம் ஆண்டு வரையிலான பல பழமையான வாகனங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவற்றை நேரில் காண மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
கண்கவர் கண்காட்சி குறித்து பேசிய பங்கேற்பாளர்களுள் ஒருவரான அமித் கோயல் மற்றும் புஷ்பிதா ஆகியோர், “பாரம்பரியமிக்க பல கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. எங்களுடைய 3 வாகனங்களை இந்த கண்காட்சியில் வைத்துள்ளோம். வாகனங்களின் உரிமையாளர்கள் அதை மிகச் சிறப்பாகப் பராமரித்து வருகின்றனர். பழமையான வாகனங்களை வைத்திருப்பதை விட அதை சிறப்பான முறையில் பராமரிப்பதே மிக சிரமமான விடயம்” என்றார்.
மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்பின் செயலாளரும், கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எம்.எஸ் குகன் கண்காட்சி குறித்துப் பேசுகையில், பாரம்பரிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் சேகரித்துப் பாதுகாப்பதில் கொண்ட ஆர்வ மிகுதியால் கடந்த 40 ஆண்டுகளாகப் பழமையான வாகனங்களைச் சேகரித்து வருவதுடன், கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு கண்காட்சிகளையும் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த கண்காட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் பிரபல ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனர் ஜெமினி வாசன் ஆகியோர் பயன்படுத்திய கார்கள் மற்றும் பழைய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் வழக்கமாக ஒரு நாள் நடத்தப்படும் இந்த கண்காட்சி இந்த முறை பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது.
மோட்டார் வாகனங்களின் மீதான ஈர்ப்பு இன்றைய கால தலைமுறையினர் மத்தியில் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு பாரம்பரிய வாகனங்களின் இந்த கண்காட்சி வாகன பிரியர்களின் கண்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதையும் படிங்க: மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக ’புல்டோசர்’ வழங்கிய தந்தை!!