சென்னை செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்சினி. இவர் செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பிரியதர்ஷினி ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவரை பிடிக்க முயன்றனர்.
இந்நிலையில், நிலைதடுமாறிய பிரியதர்சினி கீழே விழுந்த நிலையில், எதிரே வந்த லாரியில் சிக்கி அவரின் இரு கால்கள் நசுங்கின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பிரியதர்ஷினிக்கு நடந்த அவல நிலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், பிரியதர்ஷினிக்கு நடந்த துயர சம்பவம் பிரபல செய்தித்தாளில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இச்சம்பவம் தொடர்பாக இன்னும் மூன்று வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.