சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் பணிபுரிபவர்கள் மற்றும் சென்னையில் வசித்து வருபவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி சென்று வர ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் விடுமுறை நேற்றுடன் (அக். 24) நிறைவடைந்ததால் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் மக்கள் படையெடுத்து வரத் தொடங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலைகளில் ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிக்கி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், அதிகப்படியான வாகனங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கூடுதலான போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.