சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஏற்கனவே தொடங்கி பெய்து வரக்கூடிய நிலையில், தற்போது தெற்கு அந்தமான் கடல், தென்மேற்கு வங்கக்கடல் ஆகிய இரண்டு இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இதனால் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் அடிப்படையில், கனமழைக்கு வாய்ப்புள்ள 27 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.
அக்கடிதத்தில், “இன்று கடலூர், விழுப்புரம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.
இதனால் பேரிடர்களை கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (standard operating procedure) கடைபிடிக்கவும், முழு மாவட்ட நிர்வாகங்களை தயார்படுத்தவும், கனமழை முதல் மிக கனமழை காரணமாக ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான தயார் நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் என சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்துவதாகவும்” இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், பொதுமக்களுக்கு மழையால் ஏற்படும் இடையூறுகளையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, வருகிற ஒவ்வொரு நாட்களும் கனமழை முதல் மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!