சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் ஆகியவை காரணமாக மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதுமட்டுமின்றி செப்டம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு, மத்தியக் கிழக்கு அரபிக் கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி, மாலத்தீவு பகுதி, கேரள கடலோர பகுதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத் தீவு பகுதி ஆகியவற்றில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் ”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.