கனமழை எச்சரிக்கை
சென்னை: தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும்.
ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றார்.
தமிழ்நாட்டில் மழைப்பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக BASL மணம்பூண்டி விழுப்புரம் பகுதியில் 17 செ.மீ மழைப்பதிவும், பரங்கிப்பேட்டை (கடலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்) பகுதிகளில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை
அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை 452 மி.மீ பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவான 419 மிமீ-ஐ விட 8 விழுக்காடு அதிகம்.
வடகிழக்கு பருவமழை சென்னையில் 1034 மிமீ பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவு 734 மிமீ விட 41 விழுக்காடு அதிகம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘வழக்கத்தைவிட அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழை’ - புவியரசன்