சென்னை: தமிழ்நாட்டில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் அறிவித்தது. இதனால் கடந்த மூன்று நாட்களாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியில் தொடர்ச்சியாக கனமுதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று(நவ.13) அதிகாலை 4.55 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானமும் காலை 6.15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானமும், பகல் 1.10 மணிக்கு கர்னூல் செல்லும் விமானமும், மாலை 5.10 மணிக்கு மதுரை செல்லும் விமானமும் என 4 விமான சேவைகள் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், அதிகாலை மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம், காலை 9.30 மணிக்கு மதுரையில் இருந்து வர வேண்டிய விமானம், மாலை 4.20 மணிக்கு கர்னூலில் இருந்து வர வேண்டிய விமானம், இரவு 8:30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம் என 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து பிராங்க்பர்ட்(ஜெர்மன்), இலங்கை, பாரீஸ், தோகா, சார்ஜா, துபாய், அந்தமான் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மழை காரணமாக விமான சேவை மாற்றி அமைக்கப்பட்டதால் தாமதம், ரத்து பற்றிய தகவல்கள் முன்னதாகவே பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதால் பாதிப்பு எதுவும் இல்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சாதாரண மனிதராக எனது மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன் - நளினி