சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.பி.எச் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,103லிருந்து 1,200 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 102 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்த 376 பேரை தீவிரமாகக் கண்காணித்ததில் மூன்று பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை, 3684 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 90 ஆயிரத்து 412 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்களை அனைத்து துறைகளும் இணைந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 5,000 களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொருவரின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். கரோனா பாதிப்பைத் தவிர்க்க சிகிச்சை பெற விரும்புவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.
தனியார் மருத்துவமனையில் எத்தனை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களைச் சேகரித்து வருகிறோம். புதிதாக கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் உடனே தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, 411 ஆக உயர்ந்து இந்தியாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவாவில் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு