கரோனா வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பு அலுவலரும், சுகாதாரத் துறைச் செயலருமான ராதாகிருஷ்ணன் இன்று தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "கரோனா தொற்று அதிகளவில் பரவாமல் தடுக்க மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஆயிரத்து 974 பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்திவருகிறோம்.
அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். மக்கள் அனைவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனால் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுபோன்ற பகுதிகளில் எடுக்கப்படும் சிறப்பு நடவடிக்கைகளினால் தொற்று பரவலை எளிதில் தடுக்க முடியும். மேலும், கரோனா தொற்று ஏற்பட்டால் மரணம்தான் என்கிற எண்ணத்திற்கு மக்கள் சென்றுவிடக் கூடாது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 56 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களும் ஒளிப்பதிவாளர்களும் பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, ராதாகிருஷ்ணன் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவிற்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்.