
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், “சுகாதார சேவைகளை பெரும் நடவடிக்கைகளை முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காக மற்றும் தரமான சுகாதார சேவைகளை முதல் 1000 நாட்களுக்கு பெறுவதை உறுதிசெய்யும் திட்டம் வாழ்வின் முதல் 1000 நல்நாட்கள் – குழந்தையின் சீரான வளர்ச்சிக்கான நிதியுதவி திட்டம், ரத்தசோகை கர்ப்பகாலம், கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிப்பை உறுதி செய்தல் ஆகியவைகள் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

நல்ல பிறப்பு எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பது, குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடையை இரண்டு வயது வரை தொடர்ந்து கவனிப்பது, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வை ஊக்குவித்தல், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைத்தல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், தாய் சேய் நலக்குறியீடுகளில் பின்தங்கிய, 23 வட்டாரங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், ஏழுதவணைகளில், 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இத்திட்டமானது 14 மாவட்டங்கள், 15 சுகாதாரப் பகுதி மாவட்டங்களில் உள்ள குறைந்த தாய் சேய் நலக்குறியீடுகள்கொண்ட, 23 வட்டாரங்களில், 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 479 கிராம சுகாதார நிலையங்களில் உள்ள வருடத்திற்கு 37ஆயிரத்து 200 குழந்தைகள், 2 வருடத்திற்கு 74ஆயிரத்து 400 குழந்தைகள், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். பேறுகால மற்றும் குழந்தை பருவ தவணைகள் என மொத்தம் 7 தவணைகளாக வழங்கப்படுகிறது.
வாழ்வின் முதல் 1000 நல் நாட்கள் என்பது கர்ப்பக்காலம் முதல் குழந்தையின் முதல் 2 வருடங்கள் வரை ஆகும். ரத்தசோகை இல்லாத கர்ப்பக்காலம் மற்றும் தாயின் எடை சீராக அதிகரிப்பதை கண்காணித்து கர்ப்பகாலத்தில் ரூ.1000 வீதம் 3 தவணை அளிக்கப்படுகிறது. 18, 26, 36ஆவது வாரங்களில் ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு 11 கிராம் மேல் இருத்தல் மற்றும் மகப்பேறு தாயின் எடை முறையே 2, 5, 9 கிலோ அதிகரித்து இருப்பின் ரூ.1000 தாயின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படுகிறது.
சிசு மற்றும் குழந்தைப் பருவத்தில் குழந்தையின் சீரான எடை அதிகரிப்பு மற்றும் வளர்ச்சியைக் கண்காணித்து, 4 தவணைகளில் ரூ. 500 வழங்கப்படுகிறது. 6, 12, 18, 24 மாதங்களில் குழந்தையின் எடையானது. அக்குழந்தையின் பிறப்பு எடையிலிருந்து முறையே 2, 3, 3½ மற்றும் நான்கு மடங்காக அதிகரிப்பதை கண்காணித்து தாயின் சேமிப்பு கணக்கிற்கு, 4 தவணைகளில் தலா ரூ. 500 தொகை நேரடையாக செலுத்தப்படுகிறது.
Dr. MRMBS திட்டத்தின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கன நிதி உதவி, முதல் தவணை ரூபாய் 2000, 12ஆவது வாரத்திற்குள்ளும், இரண்டாவது தவணை ரூபாய் 2000, 16-18 வாரத்திற்குள்ளும் மற்றும் மூன்றாவது தவணை ரூபாய் 4000 அரசு மருத்துவமனை பிரசவத்திற்கு பிறகும் வழங்கப்படுகிறது. குழந்தையின் சிரான வளர்ச்சிக்கான நீதி உதவி திட்டத்தின் கீழ் 18-20, 26-28, 36-38 ஆவது கர்ப்பகால வாரங்களில் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் 2022-2023 மற்றும் 2023-2024 வருடத்திற்கென ரூபாய் 38.2 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. அனைத்து பயனாளிகளுக்கும் நிதி உதவி நேரடியாக தாய்மார்களின் வங்கிக் கணக்கிற்கு இயக்குநரகத்திடமிருந்து வழங்கப்படவுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் இனி ஈஸியாக சாலையைக் கடக்கலாம்..பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் பயன்பாடு அறிமுகம்