ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவும் தன்மை கொண்ட நிபா வைரஸ் காய்ச்சல், கேரள மக்களை மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளது. 2018ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியதில் 17 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர், நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலி லினி என்பது வேதனையானது.
இந்நிலையில், மீண்டும் கொச்சியில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி பொதுமக்களை மிரட்டி வருகிறது. இது சம்பந்தமாகத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை சம்பந்தமான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. கேரள எல்லையில் உள்ள ஏழு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
நிபா வைரஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் 24/7 தொலைபேசி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. 044 24334811, 9444340496, 8754448477 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு சந்தேகங்களை அறியலாம்" என்று கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் போதுமான இரத்தம் கையிருப்பு இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர், தமிழ்நாட்டை பொறுத்தவரை போதுமான அளவு ரத்தம் கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.