சென்னை: எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் 0% கஞ்சா பயிர்: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது என்ற புகார் இருந்துக் கொண்டு இருக்கிறது. எனவே முதலமைச்சர், கடந்தாண்டு ஒரே நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் உறுதிமாெழி ஏற்றனர். இது உலகச்சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், போதை பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் வகையிலும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. போதைப் பொருட்களை விற்பதை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் உணவு பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கஞ்சா என்பதை தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் என்ற நிலையில் அழித்துள்ளோம் என்ற ஒரு சிறப்பான இடத்தை காவல்துறை வைத்துள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக, தெலங்கானா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் போதை வஸ்துக்களை தடுப்பதற்கும் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவின் டிஜிபிக்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் ஆந்திராவில் ஒரு பகுதியில் 6 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிரிடப்படுகிறது.
4 ஆயிரம் கோடி கஞ்சாப்பயிர்கள் அழிப்பு: மேலும் அதனை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தனர். தமிழ்நாட்டின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக 4 ஆயிரம் கோடி கஞ்சாப் பயிர்களை ஆந்திரா அரசு அழித்து ஒழித்தது. காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பாேதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து வருகிறது. பள்ளிக்கு அருகாமையில் இதுபோன்ற போதைப் பொருட்கள் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று” என்றார்.
ஐஸ்கிரீமில் மது: கோயம்புத்தூரில் மிகவும் நெருக்கடியான ஒரு இடத்தில் ரோலிங் டப் கபே என்ற ஒரு கடை இருந்தது. அந்தக் கடையில் விற்கப்படும் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்கப்படுவதாக தகவல் வந்தது. ஆய்வில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் தயாரிப்பது உண்மை என கூறினார்கள். அதனைத் தொடர்ந்து அந்தக்கடை சீல் வைத்து மூடப்பட்டது. அந்தக் கடையை நீதிமன்றம் சென்றும் திறக்க முடியவில்லை.
பள்ளி சிறுவர்களை பாதிக்கக்கூடிய நிலையில் ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே அந்தக் கடை திறக்கப்படாமல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பள்ளி மாணவர்களை பல் மருத்துவர்கள் பரிசோதிக்கச் செல்லும் போது பற்களில் கறை இருப்பது கண்டறியப்பட்டால், அதன் பின்னணி கண்டறியப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்யப்போகிறார் என்பது தெரியாது.
குண்டாஸ் சட்டத்தில் வழக்கு: தவறு செய்த பின்னர் தான் தெரியும். விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். சட்டங்களைப் போட்டு தடுக்கிறோம். அதனையும் தாண்டி ஒன்று, இரண்டு பேர் செய்யும் தவறு செய்தப் பின்னர் தான் வெளிப்படுகிறது. அதன் பின்னர் தான் சட்டரீதியாக தண்டனைகள் வழங்கப்படுகிறது. யார் செய்யப் போகிறார் என்பதை முன்கூட்டியே தெரியாது. தமிழ்நாட்டில் கஞ்சா பயிர் செய்வது கிடையாது. வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதை பார்த்தால் போலீஸ் தடுக்கின்றனர், பிடிக்கின்றனர், நடவடிக்கை எடுக்கின்றனர்.
குண்டாஸ் சட்டத்திலும் வழக்கு போடுகின்றனர். அதற்கு மேலும் பாக்கெட்டில் வைத்து கொண்டு வருவது போன்று, எங்காவது தவறுகள் நடந்தால் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு சொல்லுங்கள் ரகசியமாக வைத்திருந்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார். சென்னையில் சுகாதார சீர்கேடு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருந்த அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “சென்னையை சிங்கப்பூர் மாதிரி எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்தாரா?
ரகசிய தகவல் அளிக்கலாம்: சுகாதார சீர்கேடு தொடர்பாக கொஞ்சம் கூட பேசுவதற்கு தகுதி இல்லாதவர். குட்கா, பான்பிராக் சென்னையில் விற்பதாக கூறிய போது, இல்லை என மறுத்தனர். ஆனால் மறுநாள் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத்தில் காண்பித்தோம்.
ஆனால் அவர் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், காண்பித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். நாங்கள் எங்கு கிடைத்தாலும் கூறுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு அனுமதி தொடர்பாக கர்நாடக முதலமைச்சரின் பேச்சு ஆபத்தானது- ராமதாஸ் அறிக்கை!