சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தன்மைகளைக் கண்டறிவதற்கான (மரபணு உருமாற்று) ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (நவம்பர் 29) நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 40 லட்சத்து 69 ஆயிரத்து 791 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 23 லட்சம் ஆர்டி-பிசிஆர் மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன.
இந்த உயர்தரமான ஆய்வகம் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. இதற்கு முன்னர் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மாநிலங்களுக்கு கரோனா மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டன. இதனால் பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஆனது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
இந்த ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 95 விழுக்காடு டெல்டா வைரஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து உயர்தரமான மரபணு பரிசோதனைக்கு ஆறாயிரத்து 714 மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் நான்காயிரத்து 618 பரிசோதனை முடிவுகள் கண்டறியப்பட்டன.
இந்தியாவில் 10 இடங்களில் உள்ள ஆய்வக வசதி இந்த மரபணு உருமாற்று ஆய்வகத்தில் உள்ளது. இந்த ஆய்வகத்தில் முழுமையாகப் பயிற்சிபெற்ற ஆறு பேர் பணிபுரிகின்றனர்.
ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெளிநாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாகச் செய்தி வெளியாகிய அடுத்த நாளே தமிழ்நாட்டில் விமான நிலையங்களில் பயணிகளைக் கண்காணிக்க அலுவலர்களை அறிவுறுத்தினோம்.
ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விமான பயணிகள் தவறான தகவல் அளித்தால் குற்றச்செயல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Omicron Variant Virus: கோவை விமான நிலையத்தில் ஒமைக்ரான் தொற்றுப் பரிசோதனை