சென்னை: டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிக் கிடங்கில், தடுப்பூசிகளின் இருப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (அக்.26) ஆய்வு மேற்கெண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பல்வேறு வகையான நோய்களைத் தடுக்க குழந்தைகள், தாய்மார்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 68 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 44 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. வரும் சனிக்கிழமை (அக்.30) 7ஆவது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் முகாம்களில் நடத்தப்படும். வார நாள்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.
மேலும் 800 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி விரைவில் செலுத்திக் கொள்ள வேண்டும். நாளை (அக்.27) நானும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணனும் டெல்லி செல்கிறோம். இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். மொத்தம் 1,650 மாணவர் சேர்க்கை இடங்களில் தற்போது 850 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்படும்.
11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை முன்பு ஆய்வு செய்த ஒன்றிய அரசின் ஆய்வுக் குழுவினர், நான்கு கல்லூரிகளில் சில பணி திருத்தங்கள் மேற்கொள்ளக் கூறினார். அந்தப் பணிகளும் இப்போது சரி செய்யப்பட்டு காணொலி வாயிலாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
19 அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்க நிதி
எனவே மீதமுள்ள 800 இடங்களிலும் இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் 19 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்க வேண்டியுள்ளது. அதற்காக 950 கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்படும்.
பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு தடை இல்லை. முகக்கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றைக் கடைபிடித்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை!