சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, அக்கல்லூரி துணைவேந்தர் சுதா சேஷய்யனுடன் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (ஜூன்.29) ஆய்வு மேற்கொண்டனர்.
வைரஸ் பகுப்பாய்வு ஆய்வகம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து பரிசோதனை மேற்கொள்ள ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஆய்வகம் மேம்படுத்தப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டிலேயே உருமாற்றம் அடையும் கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய முடியும்.
![மோடியுடன், எடப்பாடி பழனிசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12297903_daa.jpg)
நீட் தேர்வு
தமிழ்நாட்டில் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அரசியல் ஆதாயத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த குழுவில் இதுவரை 86 ஆயிரத்து 342 பேர் மனு அளித்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் குழு அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்யும்.
![முதலமைச்சர் ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12297903_du.jpg)
நீட் தேர்வில் பாதிப்புகளை களையும் வகையிலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையிலும் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு செயல்பட்டு வருகிறது. பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் நீட் பாதிப்பு தொடர்பான மாநில அரசின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பாஜக துணை நிற்கும் என தெரிவித்தார்.
பாஜகவின் இரட்டை வேடம்
ஆனால், அந்த நிலைப்பாட்டுக்கு எதிராக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் நீட் குழுவுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு அந்த கட்சியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் நிலைபாட்டை அதிமுக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும்.
![பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12297903_thu.jpg)
பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சியான அதிமுக. நீட் தேர்வு தொடர்பான தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும். நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை ஜூலை 5ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
மாநில அரசு அதற்கு சட்ட ரீதியான அறிக்கை தாக்கல் செய்யும். நீட் தேர்வினால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் ஏ.கே ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் மூலம் பயிற்சியை நடத்தும் நிறுவனங்கள் பெரும்பாலும் பலன் பெறுகின்றனர். நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தினார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்ட வடிவிலான அழுத்தத்தை ஆளுநருக்கு அளித்தார். அதன் பின்னரே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது .நீட் தேர்வை தொடர்ந்து மருத்துவ கல்வி பயின்ற மாணவர்கள் எக்ஸிட் தேர்வு எழுத வேண்டும் என்பதையும் திமுக எதிர்க்கும்.
முதலமைச்சர் முடிவு செய்வார்
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு உண்டா? இல்லையா என்பதை முதலமைச்சர் ஆராய்ந்து முடிவு செய்வார். புதிதாக அமைக்கப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளையும் நடப்பாண்டில் தொடங்குவதற்கு தேவையான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் " என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் ஆய்வுக்குழு - மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப்பெற்றதா என உயர் நீதிமன்றம் கேள்வி